பிழைத்திருந்த காலம்


என் நாக்கிற்கு ரெட்டைச்சுழி
சேட்டை பிடித்தது
இயல்பில் அனைத்தையும் உளறிடும்

மறைமுகங்கள் நாக்கை நடுநோக்கி வெட்டித் தள்ளின
இரண்டாகப் பிளந்து சர்ப்பத்தினுடையது போன்றானது

வலது உண்மை
இடது உண்மை போலும் 
பொய்யென்ற பேச்சுக்கே இடமில்லை
பொய்யின் இடம்தான் பிரிந்திருந்தது

ஒட்டியொட்டி பொய் சொல்லிப் பார்த்தேன்

பொய்யைப் போன்ற ஒன்றுதான் வாய் தந்தது

எனது பொய்கள் எங்கே?

அவைகள் பயங்கர அழகாக இருக்குமே

எங்கே எனது பொய்கள்?

எங்கே எனது பழைய நாக்கு?

விடிபல்பைச் சுற்றும் விட்டிலை
தடவிக் கொடுக்கிறது பல்லியின் நாக்கு  

அந்நீள்நாக்குதான் என்னுடைய பழைய நாக்கா?

இருக்காது

கொல்லை வீட்டின் நாய் தன் நாக்கைத் தொங்கவிட்டிருந்தது

அது எனது நாக்காய் கூட இருக்கலாம்

நகுலன் நாயை தத்துவக்குறியீடாய் அணுகியிருக்கிறாரே?

அப்படியென்றால்
நான் தேடிய என் நாக்கு நாயுடையதுதானோ?

ஆம் அது உண்மைதான்

ஏனென்றால் முன்பொரு நூற்றாண்டில் என் பழைய நாக்கிற்கு
நக்கிப் பிழைக்கவே தெரிந்திருந்தது


- தமிழ்மணி


Comments

  1. ஏனென்றால் முன்பொரு நூற்றாண்டில் என் பழைய நாக்கிற்கு
    நக்கிப் பிழைக்கவே தெரிந்திருந்தது


    அபாரம்😔😔

    ReplyDelete
  2. //எனது பொய்கள் எங்கே?

    அவைகள் பயங்கர அழகாக இருக்குமே

    எங்கே எனது பொய்கள்?//

    நல்லா இருக்கு ய்யா தமிழ்
    💗


    ReplyDelete

Post a Comment